என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொங்கல் விழா"
- ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.
- லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான பொங்காலை திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா தொடங்கிய நாள் முதல் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு இன்று பகல் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் பொங்கலிட வசதியாக ஏராளமான மண்பானைகள் கோவில் அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தது. அதனை பெண்கள் போட்டி போட்டு வாங்கினர்.
இதேபோல் பொங்கலிடும் இடத்தை பிடிப்பதற்கும் போட்டி இருந்தது. இரவிலேயே இடம் பிடித்து அங்கேயே பெண்கள் படுத்து தூங்கினர். இன்று காலை கோவில் நடை திறந்ததும் அவர்கள் வழிபாடு செய்து பொங்கலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்கு கோவில் பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது.
தொடர்ந்து பெண்கள், கோவில் வளாகத்தில் தொடங்கி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொங்கல் வைத்தனர். திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகளிலும் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இதில் ஈடுபட்டனர். இதனால் திருவனந்தபுரம் மற்றும் ஆற்றுக்கால் பகுதிகளில் புகை மண்டலமாகவே காட்சி அளித்தது. திரும்பிய இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமே காணப்பட்டது.
- ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றது.
- ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா, உலக பிரசித்திப் பெற்றதாகும்.
மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம், இன்றைய கேரளா. `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில், ஏராளமான பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயர் எதுவும் கிடையாது. அந்த அம்மன்கள் அனைவரும் அந்தந்த ஊர் பெயருடன் இணைத்து பகவதி என்றே அறியப்படுகின்றனர்.
கேரளாவில் உள்ள ஒவ்வொரு பகவதி அம்மன் கோவில்களுக்கும் தனிச் சிறப்பு இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.
கோவில் மட்டுமின்றி, அங்கு வீற்றிருந்து அருளும் ஆற்றுக்கால் பகவதி அம்மனும் தன்னுடைய அருள் சக்திக்கு சிறப்பு பெற்றவராக திகழ்கிறார்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா, உலக பிரசித்திப் பெற்றதாகும். இந்த நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள், அதுவும் பெண்கள் மட்டுமே திரண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது தனிச் சிறப்புக்குரியது.
கோவில் வரலாறு
சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம்தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் இல்லை என்பதை நிரூபித்த கண்ணகி, மதுரையை தீக்கு இரையாக்கினாள். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டதாம்.
பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய ஒரு சிறுமி வந்தாள். அந்த பக்தர், சிறுமியை அன்னையின் அம்சமாகவே பார்த்தார். பக்தர் அருகில் வந்த சிறுமி, "ஐயா.. என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா?" என்று கேட்டாள்.
ஆனால் அந்தச் சிறுமியை விட்டுப் பிரிய மனம் இல்லாத பக்தர், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, விருந்தளித்து உபசரிக்க எண்ணினார். அதை அந்த சிறுமியிடம் சொல்ல நினைக்கும் போதே, அந்தச் சிறுமி மறைந்து போனாள். வந்தது அம்மன்தான் என்பதை, அந்த பக்தர் உறுதிசெய்தார்.
அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, "தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்" என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார்.
பின்னர் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்தக் கோவிலே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியடைந்தது என்கிறது இன்னொரு கோவில் வரலாறு.
பொங்கல் திருவிழா
இந்த ஆலயத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா, 10-ம் நாள் குருதி தர்ப்பண விழாவுடன் நிறைவு பெறும். முதல் நாள் விழாவில் கண்ணகி கதையை பாடலாகப் பாடி, பகவதி அம்மனை குடியிருத்துவர். கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் செய்து (அழைத்து வந்து) இந்த பத்து நாட்களும் இங்கே குடியிருக்கச் செய்தவதாக ஐதீகம்.
மாசித் திருவிழாவின் 9-ம் நாள் விழாவாக பொங்கல் வைக்கப்படும். மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக, பெண்கள் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்வதாக இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.
மகிஷாசுர வதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை, பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்து வரவேற்றனர் என்ற மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வை மையப்படுத்திதான், மாசித் திருவிழாவின்போது, பொங்கல் வைக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.
பொங்கல் திருவிழா அன்று, கோவிலின் முன் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்து கண்ணகி வரலாற்றில் பாண்டியன் தன் தவறை உணர்ந்து மரணிக்கும் பாடல் பாடப்படும். அது முடிந்ததும் கோவில் தந்திரி கருவறையில் இருந்து தீபம் ஏற்றி வந்து, மேல் சாந்தியிடம் (தலைமை பூசாரி) வழங்குவார். அவர் கோவில் திடப்பள்ளியில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார்.
பின்னர் அந்த தீச்சுடரை சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார். அதைத் தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும். இதற்கான அறிவிப்பாக செண்டை மேளமும், வெடி முழக்கமும், வாய் குரவையும் ஒலிக்கப்படும்.
ஏனெனில் கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில், அதாவது திருவனந்தபுரம் நகரின் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், சின்னசின்ன தெருக்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தபடி பெண்கள் பொங்கல் வைப்பார்கள். ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பல லட்சம் பெண்கள் பொங்கல் வைக்கும் சம்பவம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. (இந்த பொங்கல் வைக்கும் வைபவம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
முதன் முறையாக 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்தது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தது. பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் இந்த சாதனை 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்ததாக பதிவானது.)
பொங்கல் வைக்கும் நிகழ்வு முடிந்ததும், பிற்பகலில் குறிப்பிட்ட வேளையில் கோவிலில் இருந்து நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித நீர் தெளித்து பொங்கல் நைவேத்தியம் செய்வார்கள். அப்போது வானத்தில் இருந்து விமானம் மூலமாக மலர் தூவப்படும்.
அன்றைய தினம் இரவு ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வார். அம்மன் ஊர்வலம் செல்லும் வீதி அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் குத்துவிளக்கேற்றி அம்மனை வரவேற்பார்கள். மறுதினம் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் தன் இரும்பிடம் திரும்புவார்.
ஆலய அமைப்பு
இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதி ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன், தன் நான்கு கரங்களில் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரம் தாங்கியும், அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிக்கும் சுதைச் சிற்பம் உள்ளது.
கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்ரகத்தின் கீழே அபிஷேக விக்ரகம் உள்ளது. அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப் படுகிறது.
வளாகத்தைச் சுற்றிலும் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்ச நேயர் சன்னிதிகள் உள்ளன. இந்த ஆலயம் தினமும் காலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
குத்தியோட்டம்
இந்தத் திருவிழாவில் சிறுவர்களுக்காகவும் ஒரு வழிபாடு உள்ளது. இதனை 'குத்தியோட்டம்' என்கிறார்கள். 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்கலாம். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தியின் காயமடைந்த போர்வீரர்களாக கருதப்படுகிறார்கள்.
மாசித் திருவிழா தொடங்கிய மூன்றாவது நாள், இந்த வழிபாட்டை செய்யும் சிறுவர்கள் தலைமை பூசாரியிடம் வந்து பிரசாதம் பெற்று, கோவிலின் தனி இடத்தில் 7 தினங்கள் தங்கி இருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள்.
தினமும் நீராடி அம்மன் சன்னிதியில் ஈர உடையுடனேயே 7 நாட்களில் அம்மனின் 1008 திருநாமங்களை சொல்லி முடிக்க வேண்டும். பொங்கல் வைக்கும் நாள் அன்று, சிறுவர்களின் விலா எலும்புகளின் கீழ் பகுதியில் முருகனுக்கு அலகு குத்துவது போல் உலோகக் கம்பி கொக்கியால் குத்துவார்கள்.
பொங்கல் வைத்து முடித்ததும், இந்த சிறுவர்கள் யானை மீது ஊர்வலமாக எழுந்தருளும் அம்மனின் முன்பாக அணிவகுத்துச் செல்வார்கள். மறுநாள் காலையில் சிறுவர்களின் உடலில் குத்தப்பட்டிருந்த கம்பிகள் அகற்றப்பட்டு விரதம் நிறைவுபெறும். இவ்வாறு செய்வதால், சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.
தாலிப்பொலி
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும் நாள் அன்று காலையில், 'தாலிப்பொலி' என்ற நிகழ்ச்சி நடைபெறும். சிறுமிகள் பலரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு அம்மன் சன்னிதியை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்து திரும்புவார்கள். இதில் பங்கேற்கும் அனைத்து சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனை வழிபடுவதற்கான பூஜை பொருட்கள் வைத்து, சிறு தீபம் ஏற்றிக் கொண்டு வருவார்கள். இவ்வாறு செய்வதால், சிறுமிகளுக்கு நோய், நொடிகள் வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம்
திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சிட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆற்றுக்கால் திருத்தலம்.
- ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.
- மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனியில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்களான மகேந்திரன்-அழகுகோமதி தம்பதியின் 2-வது மகள் ஸ்ரீநிதா (வயது13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது 4 வயது முதல் முறைப்படி சங்கீதம் பயின்று வருவதோடு, பல்வேறு மேடைகளில் பாடல்கள் பாடி தனித் திறமை மூலம் பரிசுகளை வென்றுள்ளார்.
ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பிரதமர்நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த சிறுமி ஸ்ரீநிதா பிரதமர் முன்னிலையில் 'சத்தியம் சிவம் சுந்தரம்' என்ற பாடலை இனிமையாக பாடி அசத்தினார்.
ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர் மோடி, ஸ்ரீநிதாவிடம் 'மிக அருமையாக பாடினாய், மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.
இதுகுறித்து ஸ்ரீநிதா கூறுகையில், நான் டெல்லி சென்று பிரதமர் முன்னிலையில் பாட கிடைத்த வாய்ப்பு மற்றும் பிரதமரிடம் பாராட்டும் பரிசும் பெற்றது என் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்றார்.
- பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது.
- முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
தருமபுரி:
தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் தருமபுரி அடுத்த முக்கல் நாயக்கன்பட்டியில் கயிறு இழுக்கும் போட்டி 2 கைகளிலும் செங்கல் தூக்கி நிற்கும் போட்டி, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் விளையாட்டுப் போட்டிகள், நடத்தப்பபட்டது.
அதன் ஒருபகுதியாக, நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு 'சாப்பாட்டு ராமன் போட்டி' என்ற பெயரில் அதிக அளவில் சாப்பிட்டு சாதனை படைப்பவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில்,1 கிலோ சிக்கன் பிரியாணியை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் போட்டி நடந்தது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரையிலும், பெண்களுக்கான 25 பேர் பங்கேற்ற இப்போட்டியில் பிரியாணி குதுகலமாக சாப்பிடும் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஷாலினி (15) என்பவர் 1 கிலோ சிக்கன் பிரியாணி 4 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அதைத் தொடர்ந்து, 1 கிலோ சிக்கன் வருவலை குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
இதில் பச்சியப்பன் என்பவர் 1 கிலோ சில்லி சிக்கனை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். முனுசாமி என்பவர் 1 கிலோ சிக்கனை 7 நிமிடத்தில் சாப்பிட்டு 2-ம் பரிசு பெற்றார்.
இறுதி நிகழ்வாக, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ் குடிக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் ராஜ்குமார் என்பவர் 2 நிமிடத்தில் 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடித்து முதல் பரிசை பெற்றார். இப்போட்டியால் முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
- ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.
- நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளான பொங்கல் வந்துவிட்டாலே கிராமங்கள் களை கட்ட தொடங்கிவிடும். 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் பல்வேறு நூதன போட்டிகள் நடத்தி கிராம மக்கள் அசத்துவது வழக்கம்.
மாடுகளை பிடிக்கும் வீர விளயாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பொங்கல் விழாவில் நடைபெற்ற பல்வேறு நூதன போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வார்கள். இந்த மோதலில் உடையும் தேங்காயை, மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர். ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் விளையாட்டு திடலில் போர் தேங்காய் உடைக்கும் விளையாட்டு போட்டி நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து முன்பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர்.
தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர். பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் வைத்து மோதி உடைத்தனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் சென்றனர். போர் தேங்காய் பரிசுப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாவடுகுறிச்சி முத்துக்குமார் அதிக தேங்காய்களை உடைத்து முதல் பரிசு ரூ.4004 மற்றும் சுழற்கோப்பை பெற்றார்.
இதேபோல செரியலூரில் நேற்று நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், இது எங்களின் சந்தோசத்துக்காக நடத்தப்படும் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்க போர்காய் தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து தேங்காய்கள் வாங்க வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பே தேங்காய் வாங்கிவிட்டோம் என்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகை மலை ஊராட்சி, கள்ளை தொட்டியப்பட்டியில் கம்பளத்து நாயக்கர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வருடாந்தோறும் தை மாதம் 1-ந்தேதி கள்ளையில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக ஊர் கவுண்டர் முன்னிலையில் பரிவட்டம் வாங்கி எட்டுப்பட்டி பொதுமக்கள் முன்பாக மாரியம்மன் கோவிலை வலம் வந்து சுற்றி மாடுகளை விரட்டி மறித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய கலையான தேவராட்டம், புல்லாங்குழல் வாசித்தல், கோமாளி ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது,
விழாவில் கல்லை ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாடு மறித்தல் நிகழ்ச்சியில் 70 களை மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கண்டுகளித்தனர்.
- இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.
- தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து தை திருநாளை கொண்டாடினார். அப்போது பாஜக தொண்டர்கள் சிலர் இது அக்கா பொங்கல், கவர்னர் அக்கா பொங்கல் என கோஷமிட்ட நிலையில், இடை மறித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.
பொங்கல் விழாவையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தி கற்றுத்தர ஏன் இந்த பாரபட்சம். இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்தியை யாரும் திக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்று சொல்லு போது இதுதான் சமச்சீர் கல்வி இல்லாமல் போகிறது. தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள். அரசு பள்ளி குழந்தைகளுக்கு அது தமிழகத்தில் மறுக்கப்படுகிறது.
தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் இந்தி கற்றுதரப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்தினால் தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருக்கிறதா? மூன்று மொழி கொள்கை இருக்கிறதா? பல மொழி கொள்கை இருக்கிறதா? இல்லையென்றால் பொய் மொழி கொள்கை இருக்கிறதா? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- பாலிகடை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் எடப்பாடி பழனிசாமி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
- 150க்கும் மேற்பட்ட பானைகளில் பிரம்மாண்டமாக முறையில் பொங்கல் விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் தனது தை பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். மக்கள் எடப்பாடி பழனிசாமியை மேளதாளத்துடன் ஓமலூர் பாலிகடை பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழி எங்கும் பெண்கள் மலர்தூவி உற்சாக வரபேற்பு அளித்தனர்.
150க்கும் மேற்பட்ட பானைகளில் பிரம்மாண்டமாக முறையில் பொங்கல் விழா நடைபெற்றது.
பொங்கல் விழாவில் போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
சேலம் திண்மங்கலம் பகுதியில் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தைபொங்கல் போல தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற நேரம் வந்துவிட்டது, தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும். மக்கள் நமது கூட்டணியை ஆதரிக்க வேண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன.
- சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா என்ற கலைவிழா சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சென்னை சங்கமம்- நம்ம ஊரு திரு விழாவை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சென்னை மக்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிராமிய கலைஞர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 18 இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
சென்னை தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்க ளில் நடத்தப்படுகிறது.
மேலும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர் லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சென்னை சங்கமம் விழாவில் நாட்டுப்புற பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மேலும் பஞ்சாப்பின் பாங்ரா மற்றும் ஜிந்துவா நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், மணிப்பூரின் லை ஹரோபா நனடம், காஷ்மீரின் ரூப் நடனம், பரதநாட்டியம், காவடியாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், மேளம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற ஆடல்- பாடல், வில்லிசை, கையுறை பாவைக்கூத்து, கோல்கால் ஆட்டம், இறை நடனம், தேவராட்டம், கணியான் கூத்து, ஜிம்பளா மேளம், களரி, மெல்லிசை, கட்டைக்கூத்து, நாடகம் உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்படை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு மூலிகை உணவுகள், கடல் உணவுகள், பாரம்பரிய மசாலாவுடன் கூடிய சுவையான கிராமிய உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை நகர மக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலைகளை கண்டுகளிக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.
- கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
- பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.
போரூர்:
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இ்ன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைத்தார் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை அதிகளவில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் சிறப்பு சந்தைகளை கட்டி உள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் சிறப்பு காய்கறிகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மொச்சைக்காய், வெற்றிலைவள்ளிகிழங்கு, பிடிகருணை கிழங்கு, சிறு கிழங்கு, வாழை இலை, தேங்காய், வாழைத்தார், அரிசி வெல்லம், நெய், பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.
இதனால் மளிகை, காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டிலும் சில்லரை வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்துகளும், கும்பகோணம் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.450 முதல் ரூ.500வரை விற்கப்படுகிறது, மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் ரூ.600, 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு மஞ்சள் கொத்து ரூ.60 முதல் ரூ.80-க்கும், 8 முதல் 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில்,
இன்று அதிகாலை முதல் கரும்பு விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது. மாலை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நள்ளிரவு முதல் மேலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிய உள்ளது. இதனால் கரும்பு கட்டுகளின் விலை குறையவே வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பொங்கல் வைப்பது வழக்கம்.
- சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் திருநாள் என்று பெருமையோடு அழைக்கப்படும், `பொங்கல்' விழா, தைப் பொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகையில் இருந்து தொடங்குகிறது. 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி (திங்கட்கிழமை) தைப்பொங்கல், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி (புதன்கிழமை) காணும் பொங்கல் என்று 4 நாட்கள் பெரு விழாவாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
தைப் பொங்கல்
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு. உத்தராயனம் என சொல்லப்படும் தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் வரையான 6 மாத காலம், தேவர்களுக்கு பகல் நேரமாகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை, தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். `உத்தரம்' என்றால் `வடக்கு', `அயனம்' என்றால் `வழி'. சூரியன் சிறிது வடக்கு நோக்கி பயணிப்பதை உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி சிறிது நகர்வதை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம்.
புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பால் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் பண்டிகையை பற்றி, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்த பொங்கல் விழாவை, `இந்திர விழா' என்று நம் முன்னோர்கள் சிறப்பித்துள்ளனா்.
சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் அன்று கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து வாங்கி, மஞ்சளை சிறுசிறு துண்டாக நறுக்கி, மஞ்சள் கயிற்றில் கோர்த்து, புதுப்பானையில் கட்டி, அந்தப் பானையை அலங்கரிப்பார்கள்.
பொங்கல் பொங்கும் பொழுது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள். அதேபோல் மேற்கு பக்கம் பொங்கினால் குடும்ப விருத்தி உண்டாகும். தெற்கு பக்கம் பொங்கினால் செலவு அதிகரிக்கும். வடக்கு பக்கம் பொங்கினால் பொருள் வரவு ஏற்படும் என்றும் சொல்வார்கள். பொங்கல் பொங்கும் பொழுது 'பொங்கலோ பொங்கல்...' என்று கூறி மகிழ்வார்கள்.
இந்த வருடம் பொங்கல் வைக்க உகந்த நேரம்:
காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், மதியம் 12.40 மணி முதல் 1.40 மணிக்குள்.
- சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா தலைமையில் 52 பானைகளில் பொங்கல் வைத்தனர்.
- பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல்... ராகுல், பிரியங்கா வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.
சென்னை:
பொங்கல் திருநாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி மகிழ்வார்கள். தமிழக மகளிர் காங்கிரசார் சார்பில் பிரியங்கா காந்தியின் 52-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பொங்கல் விழாவாக கொண்டாடினார்கள். முதலில் கேக் வெட்டினார்கள்.
அதைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா தலைமையில் 52 பானைகளில் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல்... ராகுல், பிரியங்கா வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். பொங்கல் விழாவையொட்டி பவன் வளாகத்தில் கரும்பு, வாழை, மஞ்சள் குலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து பிரியங்கா பிறந்தநாள் விழா அரங்கத்தில் நடந்தது. விழாவில் சுமார் 500 பெண்களுக்கு புடவை, பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். நிகழ்ச்சியில் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, சுமதி, அன்பரசு, எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் இருந்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற 14-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் தமிழகத்தில் இருந்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நடத்திய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்